மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புக்கலவரம் நீடித்து வருகிறது.

மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வெளியேறினர்.

இந்த நிலையில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடையே அதிருப்தி அதிகரித்ததை அடுத்து நெருக்கடி காரணமாக மாநில முதல்வர் பதவியை பைரன் சிங் கடந்த இரு நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து முதல்வராக நீடிக்க பைரன் சிங்-குக்கு உத்தரவிட்டுள்ளார்.

60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் பாஜகவுக்கு 32 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த பைரன் சிங் மீது குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

யும்னம் கெம்சந்த் சிங், தோங்கம் பிஸ்வஜித் சிங், தோக்சோம் சத்யபிரதா சிங், தௌனௌஜம் பசந்த குமார் சிங் மற்றும் கோவிந்தாஸ் கோந்தோஜம் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இதில் யாருக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லாததை அடுத்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பாஜக மத்திய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளது.

டெல்லியில் அமித் ஷா மற்றும் கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.