டெல்லி: புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களே  தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால்,  பெரும்பான்மையின்றி நாராயணசாமி தலைமை யிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுச்சேரியிலும் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசில், முதல்வர் நாராயணசாமி உடன் ஏற்பட்ட முரண்பாடுகாரணமாக,  முன்னாள் காங்கிரஸ் தலைவர் நமசிவாயம் உள்பட  5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, சட்டமன்றத்தைக்கூட்டி கடந்த 22ஆம் தேதி  பெரும்பான்மையை நிருபிக்க, புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார். அதன்படை சபை கூடியது. சபையில் உரையாற்றி நாராயணசாமி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து, வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்ற நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாகவே முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரைக்கு   மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது. அதற்கானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.