டெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  தேசியக்கொடி யேற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். >முன்னதாக போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து குடியரசு தின  கொடியேற்றுவதற்காக டெல்லி ராஜபாதைக்கு வந்த  வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். நேதாஜி தொப்பி அணிந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து மேடைக்குச் சென்ற ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தில்லி ராஜபாதை முழுவதும் ஹெலிகாப்டர் கள் மூலம் பூக்கள் தூவப்பட்டன. தொடர்ந்து குடியரசு நாள் விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை முப்படைகளின் அணிவகுப்பு   நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக குடியரசு நாள் விழாவில் வெளிநாட்டு விருந்தினர் பங்கேற்கவில்லை. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அழைப்பிதழ் இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.