சென்னை: வழக்கறிஞர்  விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.   உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் எட்டு பேரை பரிந்துரை செய்த நிலையில், 5 பேரை மத்தியஅரசு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூடு தலைமையில்  கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்து மத்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பியது. அதன்படி, நீதிபதிகள்  பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன், கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்‌ஷ்மி நாராயணன், லக்‌ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், ஜான் சத்யன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய ஆறு வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி,ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சார்பில் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த கடிதத்தில் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விக்டோரியா கவுரி பல்வேறு வெறுப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அந்த பேச்சுகள் இன்னும் யூடியூப்-பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு பேட்டியில் இந்தியாவில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை விட அபாயகரமானவர்கள் என்றும் மற்றொரு பேட்டியில் கிறிஸ்துவ பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆட கூடாது என அவர் பேசியுள்ளதை சுட்டிக்காட்டி யிருந்தனர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் விக்டோரிய கவுரி, அந்த கட்சிக்கும், அதன் கொள்கைக்கும் விசுவாசமாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்குகளும் போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.