சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். முன்னதாக, ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றார்.


அதிமுகவில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக, ஈரோடு இடைத்தேர்தலில் இரு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம்  பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுகவின் இருதரப்புக்கும்  உத்தரவிட்டது.

அதன்படி, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் இபிஎஸ் தரப்பு தென்னரசு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கையொப்பமிட்டு திரும்ப பெறப்பட்டது.

இந்த கடிதங்களுடன் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்ற ‘அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பிற்பகல், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்ப கடிதத்தை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில்  சமர்பித்தார்.

அதிமுகவில் மொத்தம் 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில்,  அவர்களில்  15 பேர் இறந்து விட்டனர். மேலும், 2 பேரின் பதவி காலம் காலாவதியாகிவிட்டது. மேலும்,  2 பேர் மாற்று கட்சியில் இணைந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டதில்,  2,501 பேர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம் ஆதரவாகர்ளுக்கு ஒப்புதல் கேட்டு படிவங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் 128 பேரும் படிவங்களில் கையெழுத்திட்டு வழங்கவில்லை என்று கூறப்பஈடுகிறது. மேலும், வேட்பாளர் ஒப்புதல் விண்ணப்ப படிவம் 17 பேருக்கு சென்று சேரவில்லை என்றும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் முக்கிய திருப்பமாக, ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இரு தரப்பும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதால் தாங்கள் வாபஸ் பெறுகிறோம் என  ஓபிஎஸ் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிப்பெறுவதற்காக பிரசாரம் செய்வோம் எனவும் அறிவித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு தெரிவித்திருப்பதால் . அதிமுகவின் ஆதரவு எடப்பாடிக்கு இருப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.  மேலும், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக  தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கலாம் என தகவல் கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் எடப்பாடி ஆதரவு வேட்பாளர் தென்னரசு நாளை வேட்புமனுத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.