டில்லி

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை அளிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துளார்.

தற்போது நாட்டின் பல பகுதிகளில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.   காஷ்மீரில் உள்ள கத்துவா பகுதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது,  குஜராத் மாநிலத்தின் சூரத்தில் ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளால்  நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

பல சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் இத்தகைய குற்றம் இழைப்போருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொண்டனர்.   இதை ஒட்டி மத்திய அமைச்சரவை போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.

அதன்படி குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என ஒரு அவசரச் சட்டம் இயற்றப்பட்டு அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.