சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மதுரை வருகிறார். வரும் 18ந்தேதி சிவராத்திரி  அன்று பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க அவர் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்த மதுரையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.  தமிழகத்தின் ஒரு மிக முக்கிய முத்திரையாக திகழ்கின்றது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலால் மதுரையும், மதுரைக்காரர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தை தாண்டி இந்தியாவே பெருமைக் கொள்ளும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல;ததின்  மூலவராக மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோமசுந்தர், சொக்கநாதர் திகழ்கிறார். அம்பாளாக மீனாட்சி அம்மன் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.  இக்கோவிலின் சித்திரை திருவிழா உலகப்புகழ்பெற்றது. பல லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் பிரமாண்டமாக நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. அதுபோல,  சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேர் பவணி புகழ்பெற்றவை.

இங்கோவிலின் மூலவரான  சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தை போக்கும் பொருட்டு பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். சிவ பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்ப வனமான மதுரையில் சுயம்பு லிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் பாவ விமோசனம் பெற்றார்.

இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெருங்கோயிலை எழுப்பினார். இதனால் தற்போது இந்திரன் விமானம் என அழைக்கப்படுகின்றது.

அதுபோல, இங்கு அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலத்தினை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது. அதனால் இந்த தலத்தில் தரித்தாலோ, பெயரைப் படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்பது ஐதிகம். மீனாட்சி அம்மன் கோயில் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டது. அதாவது சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இவ்வாறு புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, 18ந்தேதி மதியம் மதுரை விமானநிலையம் வருகிறார்.  சிறிது ஓய்வுக்கு பிறகு, மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமானநிலையம் சென்று கோவை செல்கிறார்.

பின்னர்,  அன்று இரவு  ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

குடியரசு தலைவர் முர்மு வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  பல இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வஅறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தது  குறிப்பிடத்தக்கது.