சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி எடப்படி தரப்பு வேட்பாளரே அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக  ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் வழங்கப்பட்டுள்ள பிரசாரகர்களின் பட்டியலில் ஓபிஎஸ் தரப்பு பெயர் பட்டியல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு உள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள பட்டியல் மட்டுமே ஏற்கப்பட்டு உள்ளது. இது ஓபிஎஸ்-க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்த வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்  சமர்ப்பித்தார்.

அவைத்தலைவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதமும் அனுப்பியது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது.

இதற்கிடையே, ஓபிஎஸ் அணி சார்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை  வாபஸ் பெற்றுள்ளார். ஓபிஎஸ் அணியின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தியது. மேலும், ஓபிஎஸ்  தனது அணியின் வேட்பாளரை வாபஸ் பெறச் செய்திருப்பதன் மூலம், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால்,  ஓ.பன்னீர்செல்வத்தை பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறிவிட்டு, பதில் சொல்லாமல் சென்றார்.  அதேசமயம், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதற்காகவும், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் தான் செந்தில் முருகன் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்டார். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம். தென்னரசுவுக்கு வாக்கு கேட்க மாட்டோம், இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்கு கேட்போம் என கூறினார். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இநத் நிலையில்,  செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்பரைக்கு செல்வீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பிற்கு செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன்” என கூறினார். இதனால், அவர் பிரசாரத்திற்கு செல்வாராக என்பது சந்தேகத்திற்கிமாகவே இருந்து வந்தது.  இருந்தாலும், கட்சியின் ஒற்றுமைக்காக  ஓபிஎஸ் விரைவில் ஈரோட்டில் இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடும் என தகவல்கள் பரவி வந்தன.

இதற்கிடையில்,  ஈரோடு கிழக்கில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திரங்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.  அதில்,  திமுக, தமாகா, காங்கிரஸ், அதிமுக, கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்டவை சார்பாகவும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே, கே.எஸ்.அழகிரி, ப சிதம்பரம் உள்ளிட்ட 35 பேர் கொண்ட நட்சத்திரங்கள் பெயர் வெளியாகியுள்ளது. திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட 40 பேர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதுபோல அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி, ஒ பன்னீர்செல்வம் என இருதரப்பிலும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் அளிக்கப்பட்டிருந்தது. இரு பட்டியலும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தமிழ் மகன் உசேன், முனுசாமி உள்ளிட்ட 40 பேர் பட்டியல் இடம்பெற்றுள்ளனர். ஓபிஎஸ் கொடுத்த பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

அதிமுகவின் நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ் அணியினர் இடம்பெறவில்லை என்பதுடன், ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது, ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஓபிஎஸ் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி புலம்பி வருவதாக கூறப்படுகிறது.