சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Must read

சென்னை

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறி உள்ளார்.

சென்னையில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது.  சென்னை போன்ற நகரங்களில் மழைக்காலம் என்றாலே சாலையில் தண்ணீர் தேங்குவது  போன்ற பல்வேறு இடர்பாடுகள் உண்டாகும்.   கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை இல்லாததால் கடும் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

இனியும் அதுபோல ஏதும் நிகழாமல் இருக்கத் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.   வடிகால் சீர் செய்வது, மின் கம்பங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநிலம் எங்கும் நடந்து வருகிறது.  இதைப் போல் சென்னையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்

ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம், “சென்னை நகரில் வீடற்றவர்களைக் கண்டறிந்து அவர்களை வீடற்றவர்களுக்கான காப்பகங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நேற்று நடந்த 5 ஆம் கட்ட சிறப்புத் தடுப்பூசி முகாமில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இதுவரை 84% பேர் முதல் தவணையும் 45% பேர் இரண்டாம் தவணையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னையில் மழைக் காலங்களில் மழை நீர் வடிகால்கள் இல்லாத பகுதிகள் மற்றும் குடிசை பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் ராட்சச இயந்திரங்கள் கொண்டு மழைநீர் மற்றும் கழிவு நீரினை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சென்னையில் 88 CCTV கேமரா மூலம் மழை நீர் தேங்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article