2018 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் தென்னிந்தியா மற்றும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப். சாப்டர்-2 ஏப்ரல் 14 ம் தேதி கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியானது.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 134.36 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தென்னிந்தியாவில் மட்டும் ரூ. 80.41 கோடி வசூலானதாகவும், இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் மற்றும் அமீர்கான் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

கர்நாடக மற்றும் கேரளாவில் முதல் நாள் வசூலில் முன்னணியில் உள்ளது கே.ஜி.எஃப். சாப்டர்-2.

இந்த நிலையில், இந்தப் படத்தின் வெற்றி குறித்து பேசிய கே.ஜி.எஃப். சாப்டர்-2 படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல், இந்த வெற்றிக்கு முழு காரணம் யஷ் மட்டும் தான்.

முதல் பாகம் கர்நாடக அளவில் வசூலானால் போதும் என்ற எண்ணத்தில் தான் இந்த படத்தை துவங்கினோம் ஆனால் அது எங்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

இரண்டாம் பாகம் உலக தரத்தில் அனைவரும் எங்களை கவனிக்கும் அளவுக்கு இதன் ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தது இந்தப் படத்தின் நாயகன் யஷ்.

இந்த கதை மீது நம்பிக்கை வைத்து நடித்ததோடு மட்டுமல்லாமல் தனக்கான வசனங்களையும் அவரே ஏற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் தனது ஸ்டைலில் கலக்கிய யஷ்-ஷுக்கு எனது பாராட்டுகள் என்று கூறியிருக்கிறார் நீல்.