திருச்சி: தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று கூறி வரும் நிலையில், திருச்சி அருகே  இரவு ஏற்பட்டு வரும் மின் தடையால், காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய  ராணுவ வீரர் மனைவியிடம் இருந்து 12 பவுன் தாலி செயினை திருட்டு கும்பல் பறித்துச்சென்றுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்துள்ள பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் நீல மேகம். இவர் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். படை பிரிவில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (வயது 29). இவர் தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.  நேற்று இரவு அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு  மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் காற்றோட்டத்திற்காக வீட்டின் முன்பு கட்டிலை போட்டு படுத்துறங்கி வருகின்றனர்.  அதுபோல, நேற்று இரவும் மின் தடை ஏற்பட்டது. இதனால்,  கலைவாணியும், வீட்டின்  கதவை திறந்து வைத்துக்கொண்டு ஹாலில் தூங்கியுள்ளனர்.

இதை நோட்டமிட்டு வந்த  மர்ம நபர், நள்ளிரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்க நகை, தாலிக்கொடியை பறித்தார். இதனால் தூக்கம் கலைந்த கலைவாணி கூச்சலிட்டு, கொள்ளையனிடம் இருந்து தாலியை காப்பாற்ற போராடி உள்ளார். அதற்குள்  கொள்ளையன் நகை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டான்.  கலைவாணியின் சத்தம் கேட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும்  அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தனர். ஆனால் அதற்குள் திருடன் தலைமறைவானர்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, ஊர் பொதுமக்கள் கழுத்தில் காயம் ஏற்பட்ட  கலைவாணியை அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இந்த சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து ராணுவ வீரரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.