சென்னை:
புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு கூறியுள்ளார்.
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார்  சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராம்குமாரின் வழக்கறிஞர் சங்கரசுப்பு,  “ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. பிரேத பரிசோதனையை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும்.  பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பிலிருந்து சிலர் உடனிருக்க வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
ramkumar-highcourt
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், இந்த மனுவை மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாகவும்,உயர்நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இன்று மதியம் சங்கரசுப்புவின் மனுவை விசாரித்த நீதிபதிகள்,சில நிபந்தனைகளோடு ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனையில் ஈடுபட வேண்டும். ,பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக படம்பிடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு, ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் தனது மகனின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று ராம்குமாரின் பெற்றோர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.