சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு  தபால் மூலம் வாக்களிக்கும் தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறையை எதிர்த்து  தொடரப்பட்ட  வழக்குகளில் இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க வகை செய்யப்படுகிறது. தேர்தல் பணியில் இருக்கும் அரசு பணியாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுவதால் அதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், தேர்தல் ஆணைய அறிவிப்பில், வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளரிடம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த முறையை திரும்ப பெற வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்க அனுமதி வழங்குவதற்கு பதிலாக மூத்த குடிமக்களுக்கென்று தனி வாக்குச்சாவடி அமைக்கலாம் என்றுதேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனு இதுவரை பரிசீலிக்கவில்லை. ஆகவே,  எனவே 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று,  புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதுபோல, தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறப்பட்டது.  திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், இந்த புதிய நடைமுறை காரணமாக ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும். இதன் மூலம் 30 சதவீதம் பேர் தபால் வாக்குகளை பதிவு செய்யக் கூடும்.மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியானால் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள்,  இது தொடர்பாக, தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பு கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டனர்.  மேலும்,  மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.