சென்னை:

டிடிவி தினகரன் அமமுகவின் முக்கிய நிர்வாகி இன்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேருவதாக அறிவித்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தினகரன் கட்சி சரிவு என்று செய்தி போட்டுக்கொள்ளுங்கள் என்று எகத்தாளமாக பதில் அளித்தார்.

டிடிவி தினகரனின் ஆணவப்போக்கு காரணமாக, அவரை நம்பி சென்ற பலர், பின்னர் அங்கிருந்து விலகி மாற்றுக்கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அவருக்காக குரல் கொடுத்த காரணத்தால், தங்களது பதவிகளை இழந்த அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரும் செய்வதறியாது முழிபிதுங்கி உள்ளனர்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏராளமானோர், டிடிவியை விட்டு பிரிந்து சென்ற நிலையில், சமீபத்தில், டிடிவியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த தங்கத்தமிழ் செல்வனும் அவரை விட்டு பிரிந்து திமுகவுக்கு ஓடிவிட்டார்.

இந்த நிலையில், அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இசக்கி சுப்பையாவும், அமமுகவில் இருந்து விலகி உள்ளார். அவர் அதிமுகவில் சேரப்போவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு எகத்தாளமாக டிடிவி தினகரன் பதில் அளித்தார்.  தங்களது கட்சி  நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துக்காக வெளியே போகிறார்கள் என்றால் அவர்களை தடுத்து நிறுத்தி என்ன ஆகப்போகிறது. இது  ஏற்கெனவே நான் சொன்னதுதான். கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்று தெரிவித்தார்.

இசக்கி சுப்பையா வெறும் 48 நாள் அமைச்சராக இருந்தவர். அவருக்கு எங்கள் கட்சியில் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது,  அவர் அ.தி.மு.க.வுக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சொன்னதால் தெரிகிறது. இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியவர்,

 தினகரன் கட்சி சரிவு என்று நீங்கள்  செய்தி போடுங்கள். …  வருங்காலத்தில் அது உண்மையா பொய்யா என்பதை  எங்கள் கட்சி தொண்டர்களும் மக்களும் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

கட்சியில் சேர்ந்த  ஒவ்வொருத்தருக்கும் ஒரு பதவி கொடுக்கிறோம் என்றவர், இசக்கி சுப்பையாவுக்கும் அப்படித்தான் பதவி கொடுத்தோம் என்றவர், 2009ம் ஆண்டு  முதல் முறையாக அவருக்குப் பதவி கிடைத்தது என்னுடைய ரெக்கமென்டில்தான் என்று விளக்கினார்.

எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் இன்று எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்து போய் விட்டோமா?, பன்னீர் செல்வமும் எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்து போய்விட்டோமா? என்று கேள்வி எழுப்பியவர்,  எங்களால் கைகாட்டப்பட்ட நிர்வாகிகள் வேறு இடம் தேடிப்போகிற தினால் எங்கள் இயக்கம் இன்னும் வலுவடையுமே தவிர பாதிப்படையாது என்றார்.

இதை நான் கூறினால், தினகரன் ஆணவத்தில் சொல்கிறார் என்று  சொல்கிறார்கள். அப்படி அல்ல. வேறு கட்சிக்கு போக முடிவெடுத்துள்ள  யாரையும் பிடித்து வைக்க முடியாது…. என்று கூறியவர்,  யாரையும் நாங்கள் கூப்பிடல. அவர்களா சுயமாக வந்தார்கள். இப்போது போகிறார்கள்….  போகட்டும் என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

மேலும், தற்போது இசக்கி சுப்பையா வெளியே போவதற்கு ஒரு காரணம், அவர் பெரிய அரசு காண்டிராக்டர் என்று தெரிவித்தார். அவருக்கு சேர வேண்டிய பில் பாக்கி  ரூ. 70 கோடிக்கு மேல் இருப்பதாகவும், பணத்தை கேட்டால்… அமைச்சர்  வேலுமணி பிரச்னை கொடுக்கிறார் … பாக்கி பணத்தை கோர்ட்டுக்கு சென்றுதான் வாங்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்த தினகரன்.. அதன் காரணமாக அவர் தற்போது அங்கு இணைய முடிவு செய்திருக்கலாம்… நாங்கள் இப்போது தோல்வியடைந்ததால் போகலாம். அதுதான் உண்மை.

தற்போது அவர்கள் செல்வது எங்களுக்கு இது பின்னடைவு என்று என்று சொல்கிறீர்கள் என்று செய்தியாளர்களிடம் கூறியவர்… அதை வருங்காலம் முடிவு செய்யும்.’.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.