சென்னை:

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டமியற்றி இருப்பது தொடர்பாக   கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அப்போது, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தரும் மத்திய அரசு சட்டம் பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்றும்,  சமூகநீதியை நீர்த்துப்போக செய்து, சாகடிக்கும் செயலை மத்திய அரசு செய்கிறது என்றும்  குற்றம் சாட்டினார். மேலும், முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் பாதிக்கப்படுவர், இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும்,  69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார். மேலும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி ஒரு மனதாக எடுக்கப்படும்.. அந்த முடிவே பின்பற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 69 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து ஒரு புள்ளி கூட குறையாமல் பார்த்துக் கொள்வோம் எனவும் உறுதியளித்தார்.