சென்னை: ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்,  ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும், தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பார் என  அமைச்சர் ரகுபதி கூறினார்.

பொன்முடி மீதான வழக்கில், உச்சநீதிமன்றம், அவரது தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளார், அவர் மீண்டும் எம்எல்ஏவாக பதவி ஏற்றுள்ளார். அவரை அமைச்சராக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்து, பதவி ஏற்பு விழா நடத்தி ஆளுநருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அதை கண்டுகொள்ளாத ஆர்.என்.வி. திடீரென டெல்லி சென்றுவிட்டார். இன்றுதான் அவரை சென்னை திரும்புகிறார். இதற்கிடையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதால்,  பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை, தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும் என்று கூறினார்.

பொன்முடி விவகாரத்தில்,  மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதுடன், ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஆளுநர் ரவி,  ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்  என்று குற்றம் சாட்டிய அமைச்சர்,  துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாகவும்,  மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும் என்றும் கூறினார்.