சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் டிச.30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 தேதிகளில் வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர். இன்றுமுதல் டோக்கன் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 30ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை உடன் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி,  சர்க்கரை அட்டை மற்றும் ரேசன் பொருட்கள் தேவையில்லை என்று ரேசன் அட்டை பெற்றுள்ளவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், அத்துடன் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு பெற ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், ரேசன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் அதன்படி, குறிப்பிட்ட நாளில் சென்று ரேசன் கடைகளில் பொருட்களையும் ரொக்கம் பணத்தை பெறலாம் என கூறப்பட்டது. அதன்படி இன்றுமுதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இநத் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி, பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 2-ஆம் தேதி வழங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என்றும்,  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் டிச.30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர்கள் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

இந்த முறை பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கு பைகள் வழங்கப்படாது. அதனால், பொதுமக்கள் மறக்காமல் வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.

மேலும், மாநிலத்தில் உள்ள  2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை சேர்க்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்குவதால், அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்

மேலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வேறு சில பொருட்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதலமைச்சர் பரிசீலனை செய்து முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.