500, 100- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த நவம்பர் 8ம் தேதியில் இருந்து பாஜகவினர் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஓருநாட்களில் நிலைமை சரியாகும் என்றனர், பிறகு வாரக்கணக்காகி மாதக்கணக்கில் (50 நாட்கள்) தங்களுக்குத் தாங்களே கெடு விதித்துக்கொண்டார்கள். ஆனால் நிலைமை சீரடைவதாக இல்லை.
இந்த நிலையில் பாஜகவினரின் “மாற்றிப் பேசுவது” அதிகமாகி இருக்கிறது. இரு நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “50 நாட்களில் பணத்தட்டுப்பாடு சரியாகும் என்று மோடி சொல்லவே இல்லை” என்றார்.
இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி வந்த பொன். ராதாகிருஷ்ணன்,“புத்தாண்டு முதல், அதாவது இன்னும் இரு நாட்களில்.. ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்கும்” என்றார்.
ஓரிரு நாட்களுக்கு முன், “ஐம்பது நாட்களில் பிரச்சினை தீரும் என பிரதமர் சொல்லவே இல்லை” என்றார்.  இப்போது இரு நாட்களில் பிரச்சினை தீரும் என்கிறார்.
கடந்த பொங்கல் திருவிழாவின் போது, “இந்த பொங்கல் திருவிழாவுக்கு ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடக்கும்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு இன்றுவரை தடை தொடர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.