முதல்வர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சியினரின் விறுவிறுப்பான தேர்தல் பரப்புரை….

Must read

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தின்  பட்டி தொட்டிகள் மூலை முடுக்குகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

கொதிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரசாரங்கள் நடை  பெற்று வருகின்றன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் செய்து பிரசாரம் பற்றிய ஒரு சிறு தொகுப்பு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.  அவரை ஆதரித்து முதல்வர்  திருப்போரூரில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் முதல்வர் எடப்பாடி வாக்குசேகரித்து வருகிறார். அப்போது,  அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி கட்சிக்கு துரோகம் விளைவித்தவர்களுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்டப்படும் என்றார்.

நீலகிரி:

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதகையில் உதயநிதி ஸ்டாலின் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

மதுரை:

மதுரை பெத்தானியாபுரத்தில் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்து பேசினார். அப்போது, சு.வெங்கடேசன் போன்ற ஒரு நல்ல தமிழறிஞர் தி.மு.க.விற்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் அருகில் தொடங்கி பல்வேரு இடங்களில் அவர் வாக்குச் சேகரித்த அவர், மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போது சமஸ்கிருதத்தில் பாடச்  சொல்வதால் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அமைச்சர் சேவூர் இராமசந்திரன் துர்க்கை நம்மியந்தல், இனாம்காரியந்தல், மல்லவாடி, துரிஞ்சாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் வாக்குச் சேகரித்தார்.

தேனி

தேனி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டைஇலை சின்னம் தங்களிடம் இருப்பதால் மக்கள் ஆதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராவேன் என்றும் மத்திய அமைச்சராகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

கரூர்

கரூர் நாடளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை தான்தோன்றிமலையை அடுத்த ஏமூர், வடக்குப் பாளையம், மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்குச் சேகரித்து வருகிறார். கூட்டணிக் கட்சியினரும் உடன் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

கரூர் நாடளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி முதியவர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரித்து வருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உடன் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தரிசனம் செய்து விட்டு கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து சுற்றுவட்டாரங்களில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அ.தி.மு.க. கூட்டணி தேர்தல் அலுவலகத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார். இதில் கன்னியாகுமரி நாடாளு‘மன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து சங்கராபுரம் சுற்றுவட்டாரங்களில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரசாரம் செய்து வருகிறார்.

அப்போது, பி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலர் கலராக சட்டை போட்டுக் கொண்டு வந்தும், தேனீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்தியும் மக்களை ஏமாற்றுவதாகவும், ஆனால் தான் தான் தேநீர் கடை நடத்தியவர் என்று கூறினார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், நெமிலியை அடுத்த திருமாதலம்பாக்கம், மாங்காட்டூச்சேரி, கடம்பநல்லூர், பரமேஸ்வரமங்கலம், அரிகிலபாடி உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச் சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்குப்பட்டு ஜி.சம்பத் நெமிலி சுற்றுவட்டாரத்தில் உள்ள விஜயபுரம், கரியாகுடல், காவேரிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

நாகை

நாகை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை ம.சரவணனுக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் கொங்கராயநல்லூர், அம்பல், ஏர்வாடி, திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், உத்தமசோழபுரம்  பகுதிகளில் வாக்கு வேட்டையாடி வருகிறார்.

தஞ்சை 

தஞ்சை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.கே.ஜி .நீலமேகம், தஞ்சை காமராஜ் காய்கறி சந்தை உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரித்தார்.

தஞ்சை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்  ஆர்.காந்தி தஞ்சை கீழவாசல்,  புன்னைநலலூர் மாரியம்மன் கோவில் சாலை, ஆடக்காரத்தெரு, பாம்பாட்டி தெரு, உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்றும், திறந்த வாகனத்திலும் வாக்குச் சேகரித்தார்.

புதுச்சேரி

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரச்சாரம்செய்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி முதலமைச்சர் கிரண்பேடி ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டு பேசினார். தம்பித்துரை, பொன்னையன் உள்ளிட்டோர் பா.ஜ.க. கூட்டணியை விரும்பவில்லை என்றும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தவுடன் அ.தி.மு.க.வின் தோல்வி உறுதி ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தா

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், ருத்ரா பாளையம் கண்ணாடிப்புத்தூர், செட்டியார் மில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்குச் சேகரித்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி செட்டிகுளம், மாவிலங்கை, தொட்டியப்பட்டி, தேனூர், நத்தகாடு, கண்ணப்பாடி, டி.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக வாக்குச்சேகரித்தார்.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

More articles

Latest article