பெங்களூரு:
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினையை அடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகள், வாக்கு வங்கிகளுக்காக தங்களை முன்னிறுத்தி கொள்வதில் ஒருவருக்கொருவர் முயன்று வருகின்றனர்.
காங்கிரஸ் தன் பங்குக்கு ராஜினாமா… ராஜினாமா என்று சொல்லி மிரட்டி வருகிறது… பாரதிய ஜனதா தன் பங்குக்கு தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என கூறி சர்ச்சையை கிளப்பி வருகிறது… இது அனைத்துக்கும் மேலாக தேவ கவுடாவின் கட்சி, தனது சட்டமன்ற உறுப்பினர்களை கூண்டோடு ராஜினாமா  செய்ய வைக்க முயற்சிப்பதாக தகவல் கூறி உள்ளது.
karanataka
உச்சநீதிமன்றம், காவிரியிலிருந்து வரும் 27ம் தேதிவரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது
இதை அடுத்து, கர்நாடக முதல்வர் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டி விவாதித்தார்.  மேலும், மாலை 6 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தையும்  கூட்டியுள்ளார்.
இன்று அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட அடுத்தகட்ட முடிவுக்கு, அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், காவிரி பிரச்சினையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்  மதசார்பற்ற ஜனதாதளம் தன் பங்குக்கு அரசியல் நாடகத்தை அரங்கேற்ற துடிக்கிறது.
தங்கள் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்கள் பிரதிநிதிகளை கூண்டோடு ராஜினாமா செய்ய வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த அரசியல் நாடகத்தின் தொடக்கமாக மாண்டியா பாராளுமன்ற தொகுதி எம்.பி. புட்டராஜு தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதற்கான கடிதத்தை மாண்டியா மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.
தற்போது ஹாசன் தொகுதி எம்.பி.யும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் காவிரி விவகாரத்தில் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
மேலும் கர்நாடக மக்களின் கவனத்தை ஈர்க்கவும், சித்தராமையா ராஜினாமா செய்தால் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தமது கட்சியின் வெற்றியை தீர்மானிக்க ஏதுவாக அக்கட்சியில் உள்ள 40  சட்டமன்ற உறுப்பினர்களையும் மொத்தமாக ராஜினாமா செய்ய  திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காவிரி பிரச்சினையை வைத்து கர்நாடகத்தில் அரசியல் நாடகம் அரங்கேறி வருகிறது….