சென்னை: ’40க்கு 40 வென்றால் தான் அரசியல் மாற்றம் நிகழும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான  ஸ்டாலின்   கூறி உள்ளார். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி பணியாற்றுங்கள் என்று திமுக தொண்டர்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.

நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது. நாற்பது தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் பணியாற்றிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

“2019 நாடாளுமன்றத் தேர்தல் – 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல் – இடைத்தேர்தல்கள் – 2021 சட்டமன்றத் தேர்தல் – 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தல் என ஐந்தாவது முறையாகத் தொடர்கிறது வெற்றிக் கூட்டணி!

கழக உடன்பிறப்புகள் அனைத்து தொகுதிகளிலும், ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்’ என்பதை மனதில் வைத்துப் பணியாற்ற வேண்டும்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

– கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும்.
பத்தாண்டு கால பாஜக ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனை மேலும் ஆழமாக மனதில் விதையுங்கள். மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள். இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை உணர்த்துங்கள்.
நாற்பதும் நமதே! நாடும் நமதே!