சென்னை:  இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5% இடஒதுக்கீடு பெற பிசிஎம் சான்றிதழ் வழங்கப்படும் என திமுக அரசு  அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில்,  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மதமாற்றம் என்பது என் மதம் உயர்ந்தது. மற்றவை தாழ்ந்தது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. இது “மதச்சார்பின்மைக்கு” எதிரானது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மதசார்பின்மை கூட்டணி என்றும்,  மதசார்பின்மை அரசு என்று கூறிக்கொண்டு ஆட்சி செய்து வரும் நிலையில், தற்போது ஒருதரப்பு ஆதரவாக அரசின் சலுகைகளை பெறும் நோக்கில் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கு பதில் வேற்றுமையையைத்தான் வளர்க்கும் என்பதை அறிந்துகொண்டால், வருங்காலம் வளமாக அமையும்.

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக மதமாற்றம் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஏழை எளிய மக்களின் வறுமையை கூறி, அதை முன்னேற்றுவதாக கூறி பண வசதி உள்பட சில வசதிகளை செய்துகொண்டு  ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றப்பட்டு செய்யப்பட்டு வருகின்றனர். இது பல பகுதிகளில் சலசலப்புகளை ஏற்படுத்தி, வன்முறைகளையும் தூண்டுவிடுகின்றன. இதை தடுக்கும் பொருட்டு  பல மாநிலங்களில் மதமாற்றம் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜார்க்கண்ட் மத சுதந்திரச் சட்டம், 2017-ஐ நிறைவேற்றியது. இது ஒடிசா மற்றும் மத்திய அரசால் இயற்றப்பட்ட சட்டங்களைப் போன்றது. உத்தரகாண்ட் மாநிலம் 2018-ம் ஆண்டு உத்தரகாண்ட் மதசுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றியது. சமீபத்தில் உத்தரபிரதேச அரசு சட்ட விரோத மாக மதமாற்ற தடைச் சட்டம் 2020-ஐ இயற்றி உள்ளது. இதுபோன்ற சட்டங்களால் மதமாற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில்  மறைந்த முன்னாள் முதல்வரான  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது மதமாற்றம் தடை சட்டம் கொண்டு வந்தார். ஆனால், அரசியல் காரணம் மற்றும் வாக்கு வங்கிக்காக அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, திமுக அரசு, மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்து உள்ளது.

அதாவது,  இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில், இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த முஸ்லிம்களாக கருத உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5 % இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பிசிஎம் என சாதி சான்றிதழ் வழங்கும் போது உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக அரசு கடந்த 2023ம் ஆண்டு   கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது.  முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தில்,  ‘அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை, கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களை பெற, அரசமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு, மத்திய அரசை ஒருமனதாக வலியுறுத்துகிறோம்’ என்ற அரசின் தனி தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இந்த தீர்மானம் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.  இந்த திர்மானத்தில், கிறிஸ்துவ மதத்தில் தீண்டாமை கொடுமை இருப்பதை, அரசு ஒப்புக் கொள்வது போலவும், மதமாற்றத்தை ஆதரிப்பது போலவும், இந்த தீர்மானம் இருக்கிறது. இப்பிரச்னை குறித்து ஆராய ஆணையம் ஒன்றை, மத்திய அரசு அமைத்துள்ளது. இது தொடர்பான வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.அப்படியிருக்கும்போது, இப்படியொரு தீர்மானம் கொண்டு வருவது ஏன்? என பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதுபோல இந்து மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.  சமூக நீதி, திராவிட மாடல் என்று பேசி, தினமும் இந்திய சட்டத்தால் இயலாத விஷயத்தை, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நடந்து விடும் என்று, பொய் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின், தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை மாற்றம் செய்வதற்கு முயற்சிக்கிறார்.ஹிந்து பட்டியலின சமூகத்தில் இருந்து, கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு, ஹிந்து சமூகத்தினர் பெறக்கூடிய சலுகைகளை அனுபவிக்க ஏற்புடைய சட்ட திருத்தத்தை, இந்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டிக்கிறோம்.இது, மறைமுகமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாறுங்கள் என்று மதமாற்றத்திற்கு அரசே உதவுவதாக அறிகிறோம் ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறும்போது,  கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்க, சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை கண்டிக்கிறோம். இட ஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை, அம்பேத்கர் தந்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கை, அம்பேத்கரின் உயர் சிந்தனைக்கு செய்யும் துரோகம். தி.மு.க., அரசு பதவியேற்றதில் இருந்து, அப்பட்டமாக கிறிஸ்துவ, இஸ்லாமியர் ஊதுகுழலாக செயல்படுகிறது; ஹிந்துக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், மக்களின் வரி பணத்தில் நடத்தப்படுகின்றன. ஆனாலும், மாநில அரசின் இட ஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில்லை. இதற்கு முதல்வர், மசோதா கொண்டு வருவாரா? மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு, தமிழக அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க, ஹிந்து முன்னணி தயங்காது என எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அதுபோல பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி திமுக அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.  தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம், மதங்களுக்கு இடையே பிளவை உருவாக்கவே வழிவகை செய்யும். ஜாதிகளே இல்லை என்று சொல்கிற மதங்களில், ஓட்டுக்காக ஜாதி இட ஒதுக்கீடு கேட்டு, மக்களை துாண்டி விடும் தி.மு.க., அரசின் மதவாத போக்கை, பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதங்களில் ஜாதிய பிளவுகள் உள்ளது என்றும், தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்றும், முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரா? அப்படி உறுதி செய்வாரேயானால், இதுவரை ஹிந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கியதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னதாக, கிறிஸ்துவராக மதம் மாறிய பட்டியலின மக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என, கிறிஸ்துவ மத அமைப்புகள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு, பா.ஜ., உட்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, வரலாற்று ரீதியாக பட்டியலினத்தைச் சேர்ந்த, மதம் மாறியவர்களுக்கு, அதற்கான அந்தஸ்து வழங்குவது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், 2022 அக்டோபரில் ஆணையம் அமைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலை மானியக் குழு உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அதன் பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில், கண் துடைப்பாக தமிழக அரசு ஒரு தீர்மானத்தை இயற்றி இருப்பதுடன், தற்போது  மதமாறிய இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகித  இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.