ரத்தநாடு

ஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியில் 77 வயதான கோவிந்தராஜன் என்னும் முதியவர் மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால் கொல்லப்பட்டதாக பாஜகவினர் தெரிவித்துள்ளதை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி அன்று மக்களவை தேர்தலுக்கும் 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கும் வாக்களிப்பு நடைபெற உள்ளது.   மாநிலம் முழுவதும் மும்முரமாக தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.   பாஜக – அதிமுக கூட்டணிக்கும்,  காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜன் என்னும் 77 வயது முதியவர்.   இவர் கடந்த ஆறு மாதங்களாகவே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததாக பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.   இவர் பிரதமர் மோடி மற்றும் எம் ஜி ஆர் படங்களை சட்டையில் குத்தியபடி பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வந்தார்.

நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் டிரக் ஓட்டுனரான கோபிநாத் என்பவருக்கும் கோவிந்த ராஜனுக்கும் தேர்தல் பிரசாரம் குறித்து வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.    இந்த தகராறு கைகலப்பாக மாறவே இந்த முதியவரை திமுக கூட்டணி ஆதரவாளரான திக வை சேர்ந்த கோபிநாத் அடித்துக் கொன்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தஞ்சை மாவட்ட பாஜக செயலரான இளங்கோ தமக்கு இது குறித்து சரியாக தெரியவில்லை எனவும் கோவிந்தராஜனை அரசியல் பிரசாரம் காரணமாக கோபிநாத் தாக்கி உள்ளார் என்பதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.    ஆனால் இதை  காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

இது குறித்து ஒரத்தநாடு டி எஸ் பி காமராஜ், “முதியவர் கோவிந்தராஜன் தாக்கிய உடன் மரணம் அடையவில்லை.  நேற்று இரவு சுமார் 9 மணிக்கு மரணம் அடைந்துள்ளார்.  கோபிநாத் என்பவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளோம்.  முதியவர் கோவிந்தராஜனுக்கு சிறிது மூளைக் கோளாறு இருந்துள்ளது.

அத்துடன் அவர் உரக்க கத்தும் பழக்கம் கொண்டவராகவும் இருந்துள்ளார்.   அவர் கத்தியதற்கு கோபிநாத் எதிர்ப்பு தெரிவிக்கவே தகராறு  ஏற்பட்டு கோவிந்த ராஜனை கோபிநாத் தாக்கி உள்ளார்.   ஆனால் இருவருமே எந்தக் கட்சியின் உறுப்பினரும் இல்லை. ” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜகவின் செயலர் இளங்கோ, “கோவிந்த ராஜன் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே பாஜக ஆதரவாளராக இருந்துள்ளார். அவர் பிரதமரின் புகைப்படத்துடன் பிரசாரம் செய்துள்ளார்.   அவருக்கு மூளை கோளாறு கிடையாது.   அவர் பாஜக ஆதரவாளர் இல்லை எனில் எவ்வாறு பல பேரணிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

கோவிந்த ராஜன் ஒரு முன்னாள் அரசு ஊழியர்.  அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் குடும்பத்தினருடன் மன வருத்தம் உண்டாகி பல நாட்களாக தனியே வசித்து வந்தார்.    இவரை தாக்கியவர்  தங்கள் கட்சியினர் இல்லை என திக தெரிவித்துள்ளது.   ஆனால் அவர் திக கொடியுடன் பல பேரணிகளில் கலந்துக் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.