அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

‘புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள நூலில் ‘மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள், திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு, அம்பேத்கரே பெருமைப்படுவார்’ என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜாவின் இந்தக் கருத்து தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது மட்டுமல்லாமல், அம்பேத்கருக்கு இணையாக மோடி சாதனைகள் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், மோடி குறித்த தனது கருத்தை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று இளையராஜாவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இளையராஜாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளில் ஜி.எஸ்.டி. சேவை வரி தொடர்பாக விளக்கம் கேட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும் இந்த நெருக்கடி காரணமாகவே அவர் இந்த அணிந்துரையை எழுதியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், சேவை வரி தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட ஒருவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.