சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா குறித்து,  பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான  மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அதிமுகவினரால் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், அன்னதானம் வழங்கி சிறப்பித்தும் வருகிறார்கள்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக என்னும் மாபெரும் கட்சியை கட்டிக் காத்து, இரும்பு பெண்மணியாக ஆட்சி செய்து வந்தவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன்,  நலிவுற்ற மக்கள் மேம்பெறுவதற்காகவும் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இதுவரை  5 முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தமிழகத்தை வழிநடத்தி உள்ளார்.

ஜெயலலிதாவின் மெரினா நினைவிடம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில்,  ஜெயலலிதா மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகமும் அறிவுசார் பூங்காவும் இன்று திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில்,  அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதா பற்றி பழைய நினைவுகளை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக பரவலாக போற்றப்படுகிறார். எங்களது சக்தியையும் மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை செய்திருக்கிறார். அவருடனான பல்வேறு தருணங்களை எப்போதும் போற்றுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.