கிவி: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று 2வது முறையாக சுமார் 35 நிமிடம் பேசினார். இந்த பேச்சின்போது, அங்கு சிக்கியுள்ள  இந்தியர்களை மீட்க உதவியதற்காக நன்றியும், மேலும் அங்கு சிக்கி உள்ள மாணவர்களை  மீட்கும் பணிக்கு உதவவும்  கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையேயான பேர் இன்று 12வது நாளாக தொடர்கிறது. உலக நாட்டு தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட சில நகரங்களில் ரஷ்யா போர் நிறுத்தம் அறிவித்து உள்ளது. நேற்று வரையிலான  11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவும் இதுவரை 16 ஆயிரம் இந்தியர்களை உக்ரைனில் இருந்து மீட்டுள்ளது. மேலும், முக்கிய நகரமான  சுமி நகரில் மட்டும் சுமார் 700 இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். அங்கு கடுமையான போர் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் உக்ரைனின் அதிபர்  ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இரு தலைவர்களுக்கு இடையேயான பேச்சு 35 நிமிடம் நீடித்ததாகவும், கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவி செய்தமைக்காக, உக்ரைன் அரசுக்கு தனது நன்றியையும் மோடி தெரிவித்துக் கொண்டார். மேலும்,  சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவி செய்யுமாறு உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், உக்ரைனில் தற்போது நிலவும் சூழலை சீரமைப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேசியதாகவும் கூறப்படுகிறது.