டெல்லி:

மோடி பாஜக.வுக்கு மட்டும் பிரதமர் கிடையாது. இந்தியாவுக்கே பிரதமர் என்று பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் கோபமாக கருத்து தெரிவித்துள்ளது.

தேரா சச்சா தலைவர் ராம் ரஹிம் சிங்க்கு எதிரான பாலியல் வழக்கில் அவரை குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேரா சச்சா ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இப்படி வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என உளவுத்துறை எச்சரித்திருந்தும் கூட, பல லட்சம் பேரை பஞ்ச்குலா நகருக்குள் அனுமதித்திருந்தது ஹரியானாவின் கட்டார் தலைமையிலான பாஜ அரசு.

இதனால் கலவரம் ஆரம்பித்த உடனேயே பாதுகாப்பு படையால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 5 மணி நேரங்கள் கலவரம் நீடித்த பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் சார்ந்த சம்பவங்களில் 3 பெண்கள், 1 குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. மீடியாக்காரர்கள் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டது.

இது குறித்த வழக்கை இன்று பஞ்சாப், -ஹரியானா உயர்நீதிமன்றம் விசாரித்தது. தலைமை நீதிபதி சரோன், நீதிபதிகள் சூர்யகாந்த், அவினேஷ் ஜின்கன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யா பால் ஜெயின் ஆஜரானார். இது மாநில அரசின் பிரச்சினை என்று அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இதனால் கோபமைடந்த நீதிபதிகள் ‘‘ ஏன் மத்திய அரசு மாநிலங்களை காலனி போல் கையாளுகிறது. தேசிய ஒருமைப்பாடு என்பது கட்சிகளுக்கு மேலானது. நாமெல்லாம் ஒரே தேசமா அல்லது இது கட்சியின் தேசமா?.

ஹரியானா இந்தியாவில் இல்லையா? ஏன் பஞ்சாப்-, ஹரியானா மாற்றாந்தாய் பிள்ளை போல நடத்தப்ப டுகிறது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், ’’பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது. அவர் இந்தியா முழுமைக்குமான பிரதமர் என்று’’ நீதிபதிகள் கோபத்துடன் கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும், நீதிபதிகள் ஹரியானா மாநில பாஜ அரசையும் விமர்சனம் செய்தனர். ‘‘அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை பற்றிய எரிய மாநில அரசு அனுமதித்துள்ளது. போராட்டக்காரர்களிடம் அரசு சரண் அடை ந்துவிட்டது’’ என்றனர்.