டில்லி:

உ.பி.மாநிலம் கஜ்ரவுலா பகுதியை சேர்ந்தவர் சஹாப் அலி. இவர் ‘ராஜா’ என்று பெயரிட்டு 3 வயது வெள்ளை நிற ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த ஆடு தற்போது பழைய டில்லி ஜமா மசூதி அருகே உள்ள உருது பஜார் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.4.5 லட்சமாகும். இந்த ஆட்டின் சிறப்பம்சங்களை கேள்விபட்டு இதை பார்வையிடுவதற்காகவே கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஆட்டுக்கு என்று பிரத்யே பழக்க வழக்கங்கள் உள்ளது. இது தரையில் உட்காராது, தரையில் உட்கார்ந்து சாப்பிடாது, தரையில் தூங்காது. இதற்கென்று கயிறு கட்டில் ஒன்று உள்ளது. இதில் தான் உட்காரும். தற்போது வரை இதில் இருந்து இறங்க மறுத்து வருகிறது. நடக்க வேண்டிய சமயத்தில் மட்டும் தான் தரையில் இறங்குமாம்.

இது குறித்து அலி கூறுகையில்,‘‘ இந்த ஆடு பிறந்தது முதல் தரையில் தூங்காது. அதனால் இதற்கு கயிற்று கட்டில் ஒன்று செய்து கொடுத்தோம். இது இந்த ஆட்டின் பயன்பாட்டிற்கு மட்டுமே பிரத்யேகமாக கொடுக்கப்பட்டது. இதில் உட்கார்ந்து தான் சாப்பிடும், தூங்கும். அதோடு இது எல்லோரிடமும் நட்புடன் பழகாது. தனிமையை அதிகம் விரும்பும். இதன் காரணமாக தான் இதற்கு ராஜா என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த ஆண்டு முழுவதும் அலி 100 ஆடுகள் வரை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் இந்த ஒரு ஆட்டுடன் தான், அலி மிகவும் பாசத்துடன் உள்ளார். இந்த ஆடு பிரபலமான ‘மேவதி’ இனத்தை சேர்ந்ததாகும். இந்த இன ஆடுகள் மாடு உயரத்திற்கு வளரக் கூடியதாகும். பால் மற்றும் புல் மட்டுமே சாப்பிடும். இந்த இன ஆட்டை எல்லோரும் வாங்க மாட்டார்கள். வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த இன ஆட்டை வாங்க விரும்புவார்கள்.

தோட்டபாரி, பார்பரா, துர்கி, பஞ்சாபி இன ஆடுகள் தான் வழக்கமாக ரூ. 3 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும். இந்த பட்டியலில் ‘ராஜா’ ஆடும் தற்போது இணைந்துள்ளது. ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநில ஆட்டு வியாபாரிகளின் கவனத்தை இந்த ஆடு ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.