ராஜ்பூர்:

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் ராஜ்பூர் கிராமத்தில் பாஜ தலைவர் ஹரிஸ் வர்மா 3 பசு பாதுகாப்பகங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் பட்டினி மற்றும் நோய் தாக்குதலுக்கு சிகிச்சை கிடைக்காமல் இங்கு 300 மாடுகள் இறந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

பாதுகாப்பகம் அருகில் ராட்சத குழி தோண்டி இறந்த மாடுகளின் உடல்களை புதைத்ததாக அப்பகுதி ம க்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இவரது மனைவி லட்சுமி வர்மா பீமேத்ரா மாவட்டத்தில் புல்சந்திராவில் உள்ள பசு பாதுகாப்பகத்தையும், இவர்களது உறவினர் நாராயணன் மயூரியில் உள்ள பசு பாதுகாப்பகத்தையும் பராமரித்து வந்தனர்.

இந்த 3 பசு பாதுகாப்பகமும் மாநில அரசின் கவ் சேவா ஆயோக் என்ற கால்நடை நலன் சார்ந்த அமைப்பின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வந்தது. இது வரை 3 பசு பாதுகாப்பத்திற்கும் ரூ.1.65 கோடி வரை நிதியுதவி அளிக்கபட்டுள்ளது. இந்த நிதி முழுவதும் பசு பாதுகாப்பகத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனால் பட்டினியாலும், நோய்க்கு சிகிச்சை இல்லாமலும் மாடுகள் இறந்துள்ளது. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் மாடுகள் இறந்ததாக வர்மா தெரிவித்திருந்தார். எனினும் இந்த அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு வர்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இறந்த மாடுகளை கசாப்பு கடைகளுக்கு விற்பனை செய்து தோல், எழும்பு வர்த்தகத்தில் வர்மா ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையடுத்து அவர் பாஜக.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.