ராக் மியூசிக் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஏ.ஆர் ரகுமான், காத்ரினா கைஃப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்குபெறும் விழாவில் பேச பிரதமர் மோடிக்கு நேரமிருக்கிறது. இங்கு ஒட்டுமொத்த இந்தியாவும் செயலற்று முடங்கிப்போய் கிடக்கிறது, மணிக்கணக்கில் க்யூவில் நிற்கும் சாமானிய மக்கள் அங்கேயே சுருண்டு விழுந்து சாகிறார்கள் அவர்களிடம் பேச அவருக்கு நேரமில்லை என்று காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக தாக்கியுள்ளது.

modi

பிரதமர் மோடி மும்பையில் சர்வதேச ராக் மியூசிக் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பங்குபெறும் குளோபல் சிட்டிசன் திருவிழாவில் வீடியோ மூலம் உரையாற்றுவதை தனது ட்விட்டர் மூலம் கடுமையாக விளாசியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா.
இதுவரை இந்நாட்டு குடிமக்கள் 55 பேர் பரிதாபமாக மரணத்தை தழுவியிருக்கிறார்கள், தங்கள் சொந்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்க கோடிக்கணக்கான ஏழை மக்கள் கால் கடுக்க க்யூவில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் பிரதமர் மோடி ராக் மியூசிக் நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
அவர் பாராளுமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார், மாநிலங்களவை அவர் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று நிர்ப்பந்தித்த பின்னும் அவர் அங்கு வந்து முகங்கொடுத்து பேச மறுக்கிறார்.
அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டது. பிரதமர் மோடிக்கு பாராளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே மனதில் தோன்றாமலிருப்பது இந்த நாட்டுக்கு நேர்ந்த துரதிருஷ்டம் என்று அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்