நாவலூரில் நடைபெறும் ஒரு அடுக்குமாடி கட்டுமானப் பணியில் பணியாற்றி வருகிறேன். ரூபாய் நோட்டு தடையின் எதிரொலியாக கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திடீரென கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர் எங்கே போனாரென்றே தெரியவில்லை. நாங்கள் 300-க்கும் மேற்பட்ட பனியாளர்கள் சம்பளத்துக்காக காத்திருக்கிறோம். – அய்யனார், கொத்தனார், வயது 42
நான் சாப்பிட்டு மூன்று நாட்களாகிவிட்டது, ஒப்பந்ததாரரின் மொபைல் துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனது மொபைலை ரீசார்ஜ் செய்யவும் காசில்லை. அதனால் எனது குடும்பத்தினரையும் என்னால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இன்னும் கொஞ்சநாட்கள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. – நிஜாமுதீன், பெயிண்ட்டர், வயது 32 (கல்கத்தாவை சேர்ந்தவர் சென்னையில் பணிபுரிகிறார்)

builders

தமிழகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கட்டிடப் பணியாளர்களில் இருவரின் கதறலை மட்டும் உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். இதில் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலைசெய்யும் பல ஆயிரம் அப்பாவி தொழிலாளர்களும் அடக்கம். பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்த 11 நாட்களில் நாட்டில் கடைக்கோடி ஏழை எளிய மக்கள் சந்தித்திருக்கும் எதிர்விளைவு இது.
தமிழகம் முழுவதிலும் கட்டிடப் பணிகள் முடங்கியுள்ளது. நிலைமை ஓரிரு நாட்களுக்குள் சரியாகாவிட்டால் கட்டிடப் பணிகள் அதிகம் நடைபெறும் கோவை, திருச்சி போன்ற நகரங்கள் இன்னும் மோசமாக பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
CREDAI என்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த நந்தகுமார், கட்டுமான பணியாளர்கள் பசியில் வாடுவதைக் கண்டு அவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் தங்குமிடங்களிலேயே அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும், CREDAI அமைப்பில் சேராத கிட்டத்தட்ட 500-600 கட்டுமான நிறுவனங்கள் சென்னையில் இருக்கின்றன. அந்த நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் நிலை மிகவும் பரிதாபமானது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மட்டும் 1,000 ரியல் எஸ்டேட் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுருப்பதாகவும், சென்னையில் பழைய மகாபலிபுரம், மற்றும் ஜி.எஸ்.டி ரோடு பகுதியில் மட்டும் 200 முக்கிய கட்டுமானப் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக CREDAI அமைப்பு தரும் தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவின் முன்னனி கட்டுமான நிறுவனமான BSCPL-இன் நிர்வாக இயக்குநர் பி.சீனைய்யா, அரசின் ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால் இந்தியா முழுவதும் 30 முதல் 40 சதவிகிதம் வரை முக்கிய கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். BSCPL தேசிய நெடுஞ்சாலை மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் சார்பான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும். இந்த நிலைமை இன்னும் 10 நாட்களில் சரியாகிவிடும் என்று நம்புகிறோம். வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வருவது முற்றிலும் நின்றுவிட்டது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க ஒப்பந்ததார்களிடம் பணம் இல்லை. இந்த நிலை நீடித்தால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முற்றிலும் நிறுங்கிவிடும் என்று தெரிவித்தார்.
ஆனால் நிலை இன்னும் சில வாரங்களில் இன்னும் மோசமடைய கூடும் என்ற எச்சரிக்கை கட்டுமானத்துறையில் முக்கிய நிறுவனங்களுக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாவலூரில் பணிபுரிந்து வரும் கட்டுமன பணியாளரான அய்யனார், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ப்ணத்தை மாற்ற தான் க்யூவில் நின்றபோது கண்ட காட்சியை பகிர்ந்து கொள்கிறார்: “கட்டுக்கட்டாக பைகளில் பணம் எடுத்து வருபவர்கள் க்யூவில் நிற்காமல் நேரடியாக அனுமதிக்கப்படுகிறார்கள், அவர்கள் உள்ளே போய் கட்டுக்கட்டாக பல லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள். பிரதமர் மொடி பணக்காரர்களை தண்டிக்கப்போவதாக சொன்னார், ஆனால் இப்போது பாருங்கள் யார் தண்டிக்கப்படுவதென்று? இந்த பணக்காரர்கள் வந்து க்யூவில் எல்லாம் நிற்பதுல்லை, அவர்கள் வீட்டிலிருந்து ஒரு போன் செய்தால் போதும் வங்கி மேனேஜர்கள் அவர் வீட்டுக்கே பணத்தை அனுப்பி வைத்து விடுகின்றனர் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார நிபுணரான எஸ்.ஜனகராஜன் பல கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை போய்விட்டது. ஒப்பந்ததாரர்களிடம் சம்பளம் கொடுக்க பணமில்லை என்று குறிப்பிட்டார். நாட்டில் கிட்டத்தட்ட 64 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 90% பேர் முறைசாரா துறைகளில் பணிபுரிவோர், இவர்கள்தான் நாட்டின் 50% வளர்ச்சி விகிதத்துக்கான பங்களிப்பபை செய்கிறார்கள். இவர்கள் பாதிக்கப்படுவது மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கும் என்று தெரிவிக்கிறார்.
CREDAI மற்றும் CMD of SSPDL நிறுவனங்களின் ஆளுமைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பிரகாஷ் சல்லா, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை நல்லதுதான், ஆனால் அதை செயல்படுத்திய விதம் தவறு. அரசு உடனடியாக ஏதாவது செய்து நிலமையை சீர்படுத்தாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.