அசாம் முதல்வரின் மனைவிக்கு பல பாஸ்போர்ட்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் இருப்பதாகவும், அவை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா குற்றசாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை முதல்வரும் அவரது மனைவியும் முற்றிலும் பொய்யானவை என்று மறுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக குவாஹட்டி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான தவறான தகவல் வழங்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தெலங்கானா உயர்நீதிமன்றம் கேராவுக்கு ஒரு வார காலத்திற்கு முன் ஜாமீன் வழங்கியதுடன், அந்த காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பவன் கேராவின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அசாம் அரசின் சார்பில் வாதிடுகையில், இந்த வழக்கில் தெலங்கானா நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், ஏன் அங்கு மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது விளக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த வழக்கில் தகுந்த நீதிமன்றத்தை அசாமில் அணுக வேண்டும்” என்று கேராவுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் அசாம் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அல்லது தெலங்கானா உயர்நீதிமன்றம் முன்பு தெரிவித்த கருத்துகளை எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறியது.

மேலும், பாஸ்போர்ட் குற்றச்சாட்டு வழக்கில் பவன் கேராவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]