புதுடெல்லி:
கொரோனா சிகிச்சையில் இருந்து, பிளாஸ்மா மாற்று சிகிச்சை நீக்கப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சை முறையை கைவிட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளில், பிளாஸ்மா சிகிச்சையும் ஒன்று. கொரோனா பரவத் தொடங்கியது முதல், பிளாஸ்மா சிகிச்சை முறை மிகவும் பிரபலமாகி வந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில், வைரசை போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகி இருக்கும். குணமடைந்தோரின் ரத்தத்தில் உள்ள அந்த எதிரணுக்களை பிரித்தெடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளின் உடலில் செலுத்தும் போது, அவர்களின் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்து போராடி அழிக்க உதவும். இந்த சிகிச்சைக்காக, கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சை முறையில், பிளாஸ்மா சிகிச்சை முறை பயனளிக்கிறதா என்பது குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பில் இருந்து குறைய வைப்பதிலோ அல்லது உயிரிழப்பை குறைய வைப்பதிலோ, பிளாஸ்மா சிகிச்சை முறையில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சை எந்த பங்கையும் அளிக்கவில்லை என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்துவதை கைவிட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.