அகமதாபாத்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் குஜராத், மராட்டிய மாநிலங்களை  ‘டவ்தே’ புயல் ‘சூறையாடி சென்றுள்ளது.   குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியடன் 14 பேரை பலிகொண்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று  நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தாது. புயல் காரணமாக, தென்தமிழகத்தின் சில பகுதிகள், குமரி மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது.  கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல மாநிலங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

புயலின் தாக்கம் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலும் பலத்த மழை பெய்தது.  புயலை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் இருந்தன.

இந்த நிலையில், இந்திய வானிலை மையம் எச்சரித்தபடி, நேற்று   மேலும் தீவிரமடைந்தது குஜராத்தை நோக்கி வேகமாக  நகர தொடங்கியது. இதன் காரணமாக  மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து சென்றது.  மும்பையில் நேற்று 120 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசியது. இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பை நிலைகுலைந்து போனது. மும்பை மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொரேனா தடுப்பு மையங்கள் காற்றில் பறந்தன. ரெயில் நிலைய பிளாஸ்டிக் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன.

காட்கோபரில் மின்சார ரெயில் மீது மரம் விழுந்தது. டோம்பிவிலியிலும் தண்டவாள உயரழுத்த மின்கம்பி மீது மரம் முறிந்து விழுந்தது. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. நாள் முழுவதும் மோனோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாந்திரா-ஒர்லி கடல் மேம்பாலம் மூடப்பட்டது. கடலோர மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன்  கனமழையும் கொட்டியதால் மக்களின் அன்றாட  வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்தது  பெரும் சேதம் ஏற்பட்டது. மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கோவா மாநிலத்திலும் புயலின் தாக்கம் இருந்தது.

டவ்தே புயல் நேற்று ,இரவு குஜராத்தில் கரையை கடந்தது. அப்போது  மணிக்கு 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பயங்கர சூறாவளியுடன் கனத்த மழையும் பெய்ததால், பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் உடைந்து விழுந்தது.  பல பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் உள்ள கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பல இடங்கள் சின்னாபின்னமானது. மேலும், குஜராத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தி உள்ளது., ‘மிகக் கடுமையான சூறாவளி புயலாக பின்னர் படிப்படியாக வேகம் குறைந்து செல்கிறது.

டவ்தே புயலில் சிக்கி  கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டவ்தே புயலுக்கு இதுவரை 14 பேர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.