கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள  வெள்ளியங்கிரி மலைமீதுள்ள சிவன்கோவிலுக்கு சென்று சுவாதி தரிசனம் செய்ய முயற்சிக்கும் பல பக்தர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24மணி நேரத்தில் மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறியபோது  தெலுங்கானா மாநலிம் ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (57) என்ற மருத்துவர், மயங்கி விழுந்து  உயிரிழந்த நிலையில்,  சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர் வெள்ளியங்கிரியின் முதல்மலையான  குரங்குபாலம் அருகே மயங்கி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. அதித்தொடர்ந்து,  இன்று அதிகாலை 4 மணிக்கு மலை ஏறிய தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (40) மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை, “சப்தகிரி, 7 மலைகள் (தமிழ்: சப்தகிரி, ஏழுமலை) – ஏழு மலைகள்” என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைகள், இந்த கிரகத்தின் ஆன்மீக ரீதியில் மிகவும் சக்தி வாய்ந்த இடமாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன – மவுண்ட் கைலாஷ், சிவனின் புகழ்பெற்ற உறைவிடம் வெள்ளியங்கிரி மலையின் உச்சியில், சிவன் சுயம்புவாகப் பூஜிக்கப்படுகிறார், சுயமாக உருவானவர் என கூறப்படுகிறது. மேலும், வெள்ளியங்கிரி மலை சிவபெருமானின் ஏழுமலை என்றும் தென் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையில் பக்தர்கள் புனிதயாத்திரை மேற்கொண்டு மகிழ்கின்றனர்.

ஏழுமலை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது திருப்பதி திருமலைதான். ஆனால் சைவக் கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை திருத்தலமாக திகழ்கிறது வெள்ளியங்கிரி மலைக்கோவில். நீண்ட பயணம் என்பதால், உடல் பலம் கொண்டவர்களால் மட்டுமே இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியும். இத்ந பயணத்தில் முதல் மற்றும் ஏழாவது மலை பயணம் சற்றே கடினமானதாக இருக்கும். இந்த வெள்ளியங்கிரி மலைப் பயணத்தின் போது மூலிகை நிறைந்த காற்றை சுவாசிக்கலாம். அத்துடன் மூலிகை கலந்து வரும் சுனை நீரையும் அருந்தலாம் என்று சொல்லப்படுகிறது. வழியில் பாம்பாட்டி சித்தர் குகையை பார்க்கலாம். வெள்ளியங்கிரியில் உள்ள ஏழாவது மலையில் இருக்கும் புகழ் பெற்ற பஞ்சபூத லிங்கத்திற்கு பூஜை செய்து, வழிபட்டு பக்தர்கள் தங்கள் யாத்திரையை நிறைவு செய்கின்றனர்.

இந்த கோவிலுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் கொண்ட புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு செல்லமுடியாதவர்கள் இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கோவிலிலேயே வழிபட்டு திரும்புகின்றனர். இங்கே, சிவன் பஞ்சலிங்கேசனாக ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் அருள் புரிகிறார். தென் கைலாயம் என்று அழைப்படும் இந்த வெள்ளியங்கிரியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் இருப்பவர்களும் 40 வயதுக்கும் மேலானவர்களும் இந்த வெள்ளியங்கிரி மலை ஏறுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்கின்றனர்.

இத்ந மலைக்கு பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் பக்தர்கள் வருகின்றனர். சித்ரா பவுர்ணமி மற்றும் சிவராத்திரி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு மலையேறி கோவிலுக்கு செல்பவர்களில் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது.

ஏற்கனவே 2024ம் ஆண்டு  பிப்.26 அன்று  அதிகாலை வேலூர் மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வன் (23). என்ற பி.எஸ்.சி பட்டதாரி உயிரிழந்தார். சம்பவத்தின்போது, தனது நண்பர்களுடன் வந்த தமிழ்ச்செல்வன்  பிப்ரவரி 25ந்தேதி அன்றுதனது நண்பர்களுடன்  மலை ஏறிய நிலையில்,  26ந்தேதி அன்று  அதிகாலை 5 மணியளவில் 6வது மலைக்கு வந்துள்ளனர்.  அப்போது அந்த பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டதால், சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வனுக்கு திடீரென  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு நண்பர்கள் முதலுதவி அளித்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர்,  வனத்துறையினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் தமிழ்ச்செல்வன் உடல் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திற்கு எடுத்துவரப்பட்டது. தகவலறிந்து வந்த ஆலாந்துறை போலீசார் தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 24மணி நேரத்தில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.