ஓசூர்: திமுக தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை கண்டித்து,  கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம் என  வாட்டாள் நாகராஜ் ஆவேசமாக பேசினார்.

 மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தீவிரம டைந்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழ் சினி மாக்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம். எல்லைப் பகுதிகளை அடைப்போம் என்றவர், ரஜினி கமல் போன்றவர்கள் கர்நாடகாவில் நுழைய முடியாது என்றும்  மிரட்டல் விடுத்தார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கு அங்கு ஆளும் காங்கிரஸ் அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநில துணைமுதல்வராக உள்ள டி.கே.சிவகுமார், ஏற்கனவே மேகதாது அணை கட்டும் பணி தொடங்கி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இன்று பெங்களூருவில், கன்னட அமைப்பான,  கன்னட சலுவளி கட்சி நிறுவன தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு பகுதியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த  ஆர்ப்பாட்டத்தின் போது, மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை, அதை நிறைவேற்றியே தீருவோம் என்று கோஷங்களை  முழங்கியதுடன், தமிழக அரசியல் கட்சிகள், மாநில முதல்வர்  மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த   வாட்டாள் நாகராஜ், மழைக்காலங்களில் உபரிநீர், கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது. அந்த அணைவிலிருந்து மேட்டூர் உள்ளிட்ட தமிழக அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கும் நீர் பாய்ந்து சென்று, தமிழக மக்களுக்கும் பயன்படும். எனவே, இதில் தமிழக அரசியல்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம்.

தற்போது, பெங்களூரு மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையிலும், மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததால், இன்று நாங்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் மேகதாது அணை கட்ட அனுமதி மாட்டோம் என்று கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும், அதை தடுத்து நிறுத்துவோம், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று ஆவேசமாக கூறியதுடன்,  பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரகிறது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் இல்லை, அதனால், பெங்களூரில் வாழும் தமிழ் மக்களை, தமிழ்நாட்டுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள முதல்வர் ஸ்டாலின்  தயாரா?  என கேள்வி எழுப்பியதுடன்,   மேகதாது விவகாரத்தில் , விளையாட வேண்டாம் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  ஏற்கனவே,  ஓசூர், தாளவாடி, மற்றும் நீலகிரியை கர்நாடகத்துடன் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டியவர், மேகதாது போராட்டத்திற்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம், அங்கு, அணை கட்டுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்திற்கு வரக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்தார்.

 மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தீவிரம டைந்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழ் சினி மாக்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம். எல்லைப் பகுதிகளை அடைப்போம் என எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.