சென்னை: தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகிறது, தன்னிடம் பேசுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி  டேவிட்சன் தேவாசிர்வாதம் மீதும் பகிரங்கமாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகஅரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறு பதிவிட்டதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் நிபந்தனை ஜாமினில் உள்ள சவுக்கு சங்கர், தினசரி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனக்கு தெரிந்த, தன்னுடன் பேசி வரும் பல்வேறு காவல்துறையினரின் செல்போன் அழைப்பு களை ஒட்டுக்கேட்கும் வேலையை மாநில உளவுத்துறையும், சென்னை காவல் துறையும் மேற்கொண்டு வருகிறார்கள் என குற்றம் சாட்டியவர்,  வாட்ஸ்அப் அழைப்புகளை டிராக் செய்யும் தொழில்நுட்பம் இதுவரை உலகத்தில் எந்த நாடுகளிலும் இல்லாத நிலையில், வாட்ஸ்-அப்பில் உள்ள Call Log-ஐ எடுக்கும் தொழில் நுட்பத்தை மாநில உளவுத்துறையும், சென்னை காவல்துறையும் கண்டுபிடித்து அதன் மூலம் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

தான் மட்டுமின்றி,  தன்னுடன் பேசி வரும் கீழ்மட்ட காவல்துறையினர் முதல் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை மாநில உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்களால் நேரில் அழைத்து மிரட்டப்படுவதே அதற்கு சாட்சி என்று பகிரங்கமாக கூறியதுடன், சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலும் இந்த சட்டவிரோத வேலைகளை செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்

ஏற்கனவே கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சங்கர் ஜிவால் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெற்கு மண்டல இயக்குனராக இருந்தபோது அவரது மனைவி மம்தா ஷர்மா மற்றும் நாராயண யாதவ் ஆகியோர் இயக்குனர்களாக இருந்த D3D டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் வேலையை செய்துவந்ததாகவும், தொடர்ந்து உளவுத்துறையில் அவர் பணியாற்றியபோதும் அந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வந்ததாகவும் கூறிய சவுக்கு சங்கர், அவ்விவகாரம் சர்ச்சையானதால்  சங்கர் ஜிவால் மனைவி மம்தா ஷர்மா பதவி விலகியதாக தெரிவித்தவர்,  குற்ற நடவடிக்கைகளை புலனாய்வு செய்ய RAW, IB, Interpol போன்ற புலனாய்வு அமைப்புகள் மட்டுமே பயன்படுத்தி வந்த சேவையான வாட்ஸ் அப் Call Log-ஐ எடுக்கும் முறையை மாநில உளவுத்துறையும், சென்னை காவல் துறையும் தற்போது திமுக அரசுக்கு விரோதமாக பேசுபவர்களை வேவுபார்க்க பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்

இதுகுறித்து உரிய ஆதாரங்களை திரட்டி விரைவில் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் தெரிவித்தவர், கடலூர் மத்திய சிறையில் எத்தனை கைதிகள் தனிமைச் சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார்கள்,  அதுபோல, எத்தனை கைதிகள் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமாரின் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் போன்ற விவரங்களையும் சேகரித்து இருப்பதாக கூறியவர், இதுதொடர்பான தகவல்களை,  உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை டி.ஜி.பி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமும், பதிவுத்தபால் மூலமும் புகாராக அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தனது  புகாரின் அடிப்படையில் ஒன்றிரண்டு நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தவர், , சிறைவாசம் தனக்கு மன உறுதியை தந்துள்ளதாகவும், முன்பைவிட பல மடங்கு உறுதியுடன் வெளியே வந்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை தனது செயல்பாடுகள் உணர்த்தும் எனவும் அவர் கூறினார்.

சவுக்கு சங்கர் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் மீது குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சங்கர் ஜிவால், டேவிட்சன் திமுக ஆதரவாளர்கள் என கூறப்பட்டு வரும் நிலையில், தற்போதைய சவுக்கு சங்கரின் நேரடி குற்றச்சாட்டு, அதை உறுதிப்படுத்துவது போல உள்ளது.