டில்லி

மெரிக்காவின் பிஃபைஸர் நிறுவன கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கிடைத்தால் அதன் ஒரு டோஸ் விலை சுமார் ரூ. 730 ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

அமெரிக்காவின் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான பிஃபைஸர் மற்றும் ஜெர்மனியின் பயோண்டெக் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அளிக்க நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.   இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாலும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாலும் பிஃபைஸர் நிறுவன தடுப்பூசி அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிய தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஒரு டோஸ் விலை ரூ.998 (வரிகள் உட்பட) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   அதே வேளையில் தனியார் மருத்துவமனைகளில் இந்தியா தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவன தடுப்பூசியான கோவாக்சின் ஒரு டோஸ் விலை ரூ.1200 எனவும் ஆஸ்டிரா ஜெனிகாவின் கோவிஷீல்ட் ஒரு  டோஸ் ரூ.600 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிஃபைஸர் நிறுவன தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டால் அந்நிறுவனம் ஒரு டோஸ் விலை ரூ.730 என நிர்ணயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.  மேலும் இந்த விலை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அளிக்கப்படும் விலையில் பாதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மருந்து மற்றவை போல இரு டோஸ்கள் போட வேண்டும்.

இந்த மருந்து விலை இந்திய ரூபாயில் அமெரிக்காவில் ரூ.1424 எனவும் இங்கிலாந்தில் ரூ.1532 எனவும் ஐரோப்பிய நாடுகளில் ரூ.1693 எனவும் விற்கப்படுகிறது.  ஐரோப்பிய நாடுகளில் மற்ற நாடுகளை விட விலை அதிகமாக உள்ளதால் விலையைக் குறைக்க பேச்சு வார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது