டெல்லி: நாடு முழுவதும் எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அண்டைய நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில் பல நாடுகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் விலையை பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில், பெட்ரோல் விலை இன்று  லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.97.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 9 வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.09 ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் மீதான விலை உயர்வுக்கு, மத்திய அரசை கண்டித்து  இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.  டெல்லியிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் பிற நாடுகளின் பெட்ரோல் விலையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டியுள்ளார்.

இந்திய ரூபாயில் பெட்ரோல் விலை – ஆப்கானிஸ்தான் – 66.99, பாகிஸ்தான் – 62.38, இலங்கை – 72.96, பங்களாதேஷ் – 78.53, பூடான் – 86.28, நேபாளத்தில் – 97.05க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.81க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், ஃபகீரிடம் கேள்விகளை கேட்காதீர்கள். கேமராக்களின் மூலம் அறிவை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அவர்கள் ஜும்லாக்கள் (ஜூம்லா என்றால் பொய் வாக்குறுதிகள்ஸ்ர) நிறைந்த பையை எடுத்துக்கொண்டு இந்தியாவைக் கொள்ளையடித்தார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ராகுல்காந்தி பதிவிட்டுள்ள விலை விவரம் சரியானது அல்ல என்று விமர்சனம் எழுந்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், அவர் ரூ. 72.96 என பதிவிட்டுள்ளது விமர்சிக்கப்பட்டு வருகிறது.