சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.100 கடந்துவிட்ட நிலையில், தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில்  எரிபொருளின் சராசரி விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விகிதங்களை திருத்துகின்றன. கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் எரிபொருட்களின் விலையும் உயர்ந்து வருவதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.  இதன் காரணமாக எரிப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ 100.23 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 95.59 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ 100.49 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ 95.93 ஆகவும் உள்ளது.

விலை உயர்வு காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று கூறப்பட்டு உள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 82.37 டாலராக உயர்ந்துள்ளதாகவும், இது, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான விலை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எண்ணை உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு (ஓபெக்), நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பீப்பாய்க்கு மேல் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று எண்ணை வள நாடுகளுக்கு உத்தரவிட்டு இருப்பதுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கருதப்படுகிறது  இனிவரும் நாட்களில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இனிவரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்படும் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.