சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி விரைகிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பறிகு, சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருகிறது. எதிர்க்கட்சியினரை ஒடுக்க நினைக்கும் தீவிரம், மக்களின் பாதுகாப்பில் இல்லை என சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைள் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக எம்.பி. ராசா, இந்துக்கள் குறித்து பேசிய அவதூறு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்து பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ கட்சிகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தியது.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் வீடுகளில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு வருகிறனது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், இது சம்பந்தமாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு கலாச்சாரம், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சிறு குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா, தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவர் நாளை, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.