சென்னை: தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவராக உள்ள காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கத்தோலிக்க பேராயர்கள் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, ரோம் நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அடுத்த ஆண்டு (2022) வாடிகன் நகரில் தமிழகத்தில் பிறந்து மறைந்த பேராயர் தேவசாகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இதறகு அழைப்பு விடுக்கும் வகையில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கத்தோலிக்க பேராயர்கள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரி மாவட்டம் காற்றாடி மலையை சேர்ந்த தேவசாகாயம் அவர்களுக்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்க உள்ளார். இந்த நிகழ்வு விழா 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி ரோம் நகரில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வரும் ஆர்வத்துடன் பரிசீலிப்பதாக தெரிவித்து உள்ளார் என்றார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் ஆண்டனி சாமி, முதல் தமிழர் புனிதராக உயர்ந்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்க முதல்வரை அழைத்தோம் கட்டாயம் வருவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.
கடந்த மாதம் இத்தாலி சென்ற பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிசை சந்தித்து பேசினார். அப்போது, போப் ஆண்டவரை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழக முதல்வரை வாடிகனுக்கு வருமாறு தமிழக கிறிஸ்தவ பேராயர்கள் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.