சென்னை:  தனியார் கட்டடங்களை இடிக்க மாநகராட்சியின்  ஒப்புதல் பெற வேண்டும்  என்றும்,  பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும்  சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே தெருபலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மயானங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

மத்திய பாஜக அரசு  இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டமாக ஸ்வாச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டம் கொண்டு வந்து, நாடு முழுவதும் தூய்மை பணிக்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.  அதன்படி பொதுஇடங்களில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், அதற்காக பொது கழிப்படங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்களோ, முழுமையாக பொதுக்கழிப்பிங்களை உபயோகப்படுத்தாமல், பொதுவெளிகளையே உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவ காரணமாகிறது.

இந்த நிலையில், மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்க முடியும். இதனை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதற்காகவே சென்னை மாநகரில் பல இடங்களில் பொது கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் பலர் அதனை முறையாக கடைபிடிக்காமல் பொதுஇடங்களில் சிறுநீர் கழித்து வருகின்றனர். அவ்வாறு  விதியை மீறி சிறுநீர் கழிப்பவர்களிடம் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்க;பபடும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.  இதற்கான உத்தரவை கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கான அபராத தொகை ரூ.50 என்பது குறைவானதாகவே இருந்த போதிலும் அதனை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் பொது இடங்களில் சுகாதாரத்தை பேண முடியும் என்று கூறினார்.

அதுபோல சென்னையில் இனி தனியார் கட்டடங்களை இடிப்பதற்கும் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அதிகாரிகள் கள ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியபிறகே இடிக்க அனுமதிக்கப்படும் என   சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்குப் பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்து, சிகிச்சைப் பலனின்றி பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் விளக்கமளித்த மேயர் பிரியா, இனிவரும் காலங்களில் கட்டிடம் இடிக்கும் போது மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை நேரில் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக  சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கட்டிடம் இடிக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பே பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என்றும், பேரிகார்டுகள், அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை வாசகங்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருக்க இருக்க வேண்டும் என்றும், இந்தப் பாதுகாப்பு பணிகளை முடித்த பிறகு கட்டிடத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிக்க வேண்டும் என்றும், அதன்படி, அடுத்த 3 நாட்களுக்குள் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அருகே உள்ள கட்டடங்கள் சேதம் அடையாதவாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் கட்டிடம் இடிக்கும் பணியை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டிடம் இடிப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பணிகளை தொடங்கினால் உரிமையாளர்கள் மீதும், கள ஆய்வு மேற்கொள்ளாமல் அனுமதி அளித்தால் மாநகராட்சி பொறியாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.