ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நான்கு மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியில் தேர்தல் சமயத்தில் அமரீந்தர் சிங் ஏற்படுத்திய உட்கட்சி குழப்பத்தால் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று நேரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என்று செய்திகள் பரப்பப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தலைமை தான் பொறுப்பு என்று பேசப்படுவது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், “தலைமை என்பது நேரு குடும்பம் மட்டுமல்ல” என்று கூறினார்.

மேலும், “தலைமை அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துள்ளது, தேசிய அளவில், மாநில அளவில், மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் அனைத்து மட்டத்திலும் உள்ள தலைவர்கள் தோற்றுவிட்டதாகவே அர்த்தம்.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு அனைவருமே பொறுப்பு. ஒன்றியம் முதல் தேசிய அளவு வரை அனைத்து மட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க இளைஞர்களுக்கு வழி விட என்னைப் போன்ற வயதானவர்கள் தயாராக இருக்கிறோம்.

ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் நடைபெறும்” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.