சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  மண்டலங்களின் எண்ணிக்கை 15ல் இருந்து  23ஆக உயர்த்தப்படுகிறது என்றும், பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரிந்து வழங்காவிட்டால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்த்தை கடந்த 2011 ஆம் ஆண்டு கிடைத்தது. அதைத்தொடர்ந்து,  155 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சி 200 ஆக உயர்த்தப்பட்டது. மேலும்,  10 மண்டலங்களுடன் செயல்பட்டு  வந்த மாநகராட்சி 15 மண்டலங் களுளாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில், அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ப  மண்டலங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி 23 மண்டலங்கலாக மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது.

அதன்படி 22 சட்டமன்ற தொகுதிகளில் 23 மணடலங்கள் அமைக்கப்பட உள்ளன.  இதற்கான பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி யிருக்கிறது.  இந்த புதிய மண்டலங்கள் மற்றும் அவற்றில்  இடம்பெறவுள்ள வார்டுகளின் விவரங்கள் அடங்கிய உத்தேசபட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.  அதில், “ திருவொற்றியூர் மண்டலத்தில் 18 வார்டுகளும், மாதவரம் பகுதி பொன்னேரி பகுதியில் 15 வார்டுகளும், கொளத்தூர் 7 வார்டுகள், பெரம்பூர் 7, ஆர்.கே.நகர் 7, ராயபுரம் 6 , துறைமுகம் 6.  திரு.வி.க.நகர் 6, வில்லிவாக்கம் 6, அம்பத்தூர் மதுரவாயல் பகுதி13,  அண்ணாநகர் 7, எழும்பூர் 6,  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 7,  ஆயிரம்விளக்கு 7,  தி.நகர் 7 விருகம்பாக்கம் மதுரவாயல் பகுதி 6,  மதுரவாயல் 15, ஆலந்தூர் பகுதி பல்லாவரம் சோழிங்கநல்லூர் 12, சைதாப்பேட்டை  7, மயிலாப்பூர் 7, வேளச்சேரி  8, சோழிங்கநல்லூர் வேளச்சேரி ஆலந்தூர்11, சோழிங்கநல்லூர் 9.” ஆகிய 23 மண்டலங்களாக   உயர்த்தப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில்,  தனி நபர் இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு  வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள் வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் மற்றும் மீத்தேன் எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள தனி நபர் இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

குப்பைகளை தரம் பிரித்து வழங்காத இல்லங்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, நோட்டீஸ் வழங்கப்பட்டும் குப்பைகளை தரம் பிரித்து தராத இல்லங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.