சென்னை:

கோவில் நிலங்கள் ஆக்கிரப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் தமிழகஅரசின் அரசாணையை ஏற்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.   எவ்வளவு கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படாமல்  பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

அரசு, புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்டு மாதம்  30ம் தேதி தமிழக அரசு புதிய  அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து ராதா கிருஷ்ணன்  என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தமிழக அரசின் அரசாணை, சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது என்றும், இந்த  அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் கடந்த விசாரணையின்போது, மனுதாரரின் புகாருக்கு பதில் அளிக்கக்கோரி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை யானது, மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பிறப்பித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மத வழிப்பாட்டு தளங்களுக்கு கிடையாதா? என கேள்வி எழுப்பினர். இந்த அரசாணை மூலம்  கோவில் நிலங்களை விற்க அறநிலைய துறையை அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனளிக்கும்? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள்  இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகவும் வலியுறுத்தினர்.

இந்த மனு மீதான தீர்ப்பை தேதிக்குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.