சென்னை: தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


கொரோனா பரவலுக்கு பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய தொழிற் கொள்கை வகுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது புதிய தொழிற்கொள்கை தற்போது தயாராகி விட்டதாகவும், அதை முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் இன்று நடைபெறக்கூடிய நிகழ்வில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகளுடன் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இன்று கையெழுத்தாகின்றன.
இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, மணப்பாறை, ஓரகடம், கும்மிடிப்பூண்டி, தருமபுரி ஆகிய இடங்களில் சிப்காட் அமைப்பதற்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.