சென்னை: தமிழகத்தில்  75ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான தொழில் தொடங்க  28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதிய தொழிற்கொள்கையை வெளியிடுகிறார்.

தமிழகத்தில் தொழில்வளத்தை பெருக்கும் வகையில்,  அரசின் தொழில்துறை சார்பில் 2 முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.  முதன்முதலாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், கடந்த 2015-ம் ஆண்டு முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.  தொடர்ந்து 2019ம் ஆண்டு  ஜனவரியில் முதல்வர் பழனிசாமி தலைமையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன்மூலம்  உலகம் முழுவதும் உள்ள தொழிலதிபர்களை, தமிழகத்தில் தொழில்தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொருளாதாரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகள்,  அதுபோல, கொரோனா காலக்கட்டத்தில், முன்னாள்  தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்,  தமிழகத்தில்  தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழிற்கொள்கை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செய்யும் கொள்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  தொடர்ந்து தமிழகஅரசின்  தொழில் முதலீட்டுக் கான குழு, குறிப்பிட்ட இடைவெளியில் கூடி, புதிய முதலீடுகளுக்கான ஒப்புதல்களை வழங்கி வருகிறது. இதையடுத்து, அமைச்சரவையில் 34 திட்டங்கள் மூலம் ரூ.52 ஆயிரத்து 257 கோடி முதலீடு மற்றும் 93 ஆயிரத்து 935 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் வகையிலான தொழிற்நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  தமிழகஅரசு அனுமதி வழங்கிய  34 திட்டங்களில் 28 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது.

இதற்கான விழா, சென்னை ராஜா அண்ணா மலைபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் தொழில்துறை சார்பில் நடக்கிறது. இந்த விழாவில், தமிழகத்தின் புதிய தொழில் கொள்கை-2021, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் கொள்கை -2021 ஆகிய இரு தொழில் கொள்கைகளை முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறார்.

இதைத் தொடர்ந்து, ரூ.28 ஆயிரத்து 53 கோடி மதிப்பில் 68,775 பேருக்கு வேலை அளிக்கும், 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத் தாகின்றன. இதுதவிர, ரூ.3,489 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற தொழில் திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் மாநல்லூர், காஞ்சிபுரம் – ஒரகடம் பகுதி-2, தருமபுரி- தடாங்கம், புதுக்கோட்டை – ஆலங்குடி, செங்கல்பட்டு – ஆலந்தூர் பகுதி-2, நாமக்கல் – ராசம்பாளையம், திருவண்ணாமலை – பெரியகோளப்பாடி, சேலம் – பெரிய சீரகப்பாடி, உமையாள் புரம் ஆகிய இடங்களில் அமைக்கப் பட்டுள்ள தொழில்பூங்காக்கள், தொழிற் பேட்டைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சிறப்பாக செயல் பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

தமிழக அரசின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பழைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழிற் நிறுவனங்களின் தொழில் நிறுவன உற்பத்தியையும் இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். ஒரகடம், கும்மிடிபூண்டி ,மணப்பாறை ,தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் சிப்காட் தொழில் பூங்காவுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.