இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக உள்ளார் பேட் கம்மின்ஸ்.

அவரது தாயார் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து இந்திய சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துவிட்டு ஆஸ்திரேலியா திரும்பினார்.

இவரது தாயார் புற்றுநோயால் அவதிப்படுவதை அடுத்து இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்திய அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய கம்மின்ஸ் தனது தாயைக் காண தாயகம் திரும்பியதால் இந்தூரில் நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் மீதமுள்ள டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாயாரின் இறுதி நாட்களில் அவருடன் அருகில் இருக்க விரும்புவதால் தொடரில் இருந்து அவர் வெளியேறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருப்பார். 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.