2022 செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற டி-20 தொடரில் விளையாடிய வேகப்பந்து ஜஸ்பிரித் பும்ரா அதன்பின் காயம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது முதுகு பிடிப்பு சரியாகவில்லை என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் 2023 மார்ச் மாதம் துவங்க இருக்கும் 16வது ஐ.பி.எல். தொடரிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் பும்ரா இதுவரை 100 சதவீத உடல்தகுதி பெறவில்லை என்றும் அவருக்கு மேலும் சில மாதம் ஓய்வு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட தேவையான பயிற்சியை எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.

பி.சி.சி.ஐ.-யின் இந்த தகவலை அடுத்து ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.